சென்னை: கடந்த டிசம்பர் 17ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே முகமது கவுஸ் என்பவரிடமிருந்து ரூபாய் 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், ஏற்கனவே திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை அதிகாரி பிரதீப் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது.
தாமோதரன் மற்றும் ராஜா சிங் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நான்கு வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு சுமார் ஒரு கோடி வரை பணம் வழிப்பறி செய்ததும் தெரிய வந்தது. எஸ்எஸ்ஐ சன்னி லாய்டு மட்டும் தனியாக கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக வழிப்பறி செய்து வந்துள்ளார்.
சன்னி லாய்டு வழிப்பறி செய்த பணத்தில் ஜாம் பஜார் பகுதியில் ஒரு அதிநவீன உடற்பயிற்சி கூடம் அமைத்து இருப்பதும், ஈசிஆர் பகுதியில் ரிசார்ட் வாங்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கோட்டூர்புரத்தில் 26 இடங்கள் ஆக்கிரமிப்பு.. கோவில் நிலத்தில் ஞானசேகரன் வீடு.. சோதனையில் பகீர் திருப்பம்..!
மேலும், சன்னி லாய்டு பூக்கடை காவல் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த போது தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு மூன்று முறை பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் கூடுதல் தகவல்.
மொத்தமாக திருவல்லிக்கேணி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, வருமான வரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமான வரித்துறை அதிகாரி பிரதீப் ஆகிய ஐந்து பேரும் இணைந்து பூக்கடை, ராயபுரம், நேப்பியர் பாலம், திருவல்லிக்கேணி, ஜாம் பஜார் பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சைதாப்பேட்டை எஸ்எஸ்ஐ சன்னி லாய்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்த நிலையில் அவர் கடந்த இரு தினங்களாக செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகி உள்ளார். இதனையடுத்து எஸ்எஸ்ஐ சன்னி லாய்டை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.