திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதற்கு அதிமுகவினர் மட்டுமன்றி பொதுமக்கள், மகளிர் அமைப்பினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர், பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருப்பூர் அனுப்பர்பாளைம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, திருப்பூர் காந்தி நகர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் அதிமுகவினர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜான், ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்று திமுக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆ.ராசாவைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கிடையே ஆ. ராசா இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் வருகையை முன்னிட்டு ட்ரோன்களுக்கு தடை