திருப்பூர் - தாராபுரம் சாலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது. இதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிலையில் அந்த இடத்தில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். மேலும் அவர் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஆலோசனைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "மத்திய அரசிடம் இருந்து திருப்பூருக்கு மருத்துவ கல்லூரி அமைக்க உத்தரவு பெற்றுக் கொடுத்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோன். 336 கோடி ரூபாயில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது. அதற்கான ஆய்வு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற உள்ளதால், தேதி மாற்றப்படுமா என்பது குறித்து ஓரிரு நாளில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்" என்றார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ’காலாவதியான தீவனங்கள் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’