ஃபிளிப்கார்ட் ஊழியராக பணியாற்றி வருபவர் பாலாஜி. இவர் திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலத்தை அடுத்த நடுப்பட்டி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தபோது பாலாஜியை வழிமறித்த இரண்டு பேர், அவரை சரமாறியாகத் தாக்கிவிட்டு 47 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்தில் பாலாஜி புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து மறுநாளே குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மணிவேல் என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 27 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இதனிடையே மற்றொரு குற்றவாளியான பாலகுருநாதன் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில், திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் அவர் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை தொடர்ந்து காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தி, அங்கு பதுங்கியிருந்த பாலகுருநாதனை கைது செய்து அவரிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.