திருப்பூரில் உயர் மின்கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த விவசாயி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து, மின்சாரம் கொண்டுசெல்வதற்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு 2013ஆம் ஆண்டு புதிய நில எடுப்புச் சட்டப்படி, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக மார்ச் 9ஆம் தேதி, விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து உயர்மின் கோபுரம் அமைத்திட கையப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று அச்சத்தில் மக்களே நொறுங்கி உள்ள இச்சமயத்தில், விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மத்திய அரசின் பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்துள்ளார். தன்னுடைய விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின் கோபுரத்திற்கு இழப்பீடு தராததால், மன உளைச்சல் அடைந்த 75 வயதான விவசாயி ராமசாமி, உயர்மின் அழுத்தக் கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி இன்று காலையில் தெரியவந்துள்ளது. இந்த விவசாயியின் இறப்பிற்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவில்லை என்றால் போராட்டம் - அய்யாக்கண்ணு!