திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பாப்பாங்குளத்தை சேர்ந்தவர் வரதராஜன்(63). அதேபகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் சோளத்தட்டு பயிரிட்டுள்ளார். அந்த சோளத்தட்டுகளை அறுவடை செய்யும் பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் வரதராஜன் மற்றும் விவசாய கூலித் தொழிலாளி மாறன் (66) ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 24 ) காலை வழக்கம் போல் இருவரும் சோளத்தட்டு அறுவடை பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது சோளக்காட்டுக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை, வரதராஜனை தாக்கியது.
இதில் அவரின் தோள்பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாறன் சத்தம் போட்டார். உடனே சிறுத்தை மாறனை தாக்கிவிட்டு சோளக்காட்டுக்குள் பதுங்கியது. இதில் அவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.
அதில் சிலர் சிறுத்தையைத் தேடி சோளக்காட்டிற்குள் சென்றனர். அப்போது அங்கிருந்த சிறுத்தை மேலும் இருவரைத் தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்த திருப்பூர் கோட்ட வனச்சரகத்தினர், சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சேவூர் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சிறுத்தையைத் தேடி வருகின்றனர். படுகாயம் அடைந்த 4 பேரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். அப்போது கவச உடை அணிந்தபடி சோளக் காட்டிற்குள் சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் ஒருவர் காயமடைந்தார். இந்த காட்சிகள் ட்ரோன் காமிராவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற கிராமத்திலிருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதி 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து வழிதவறி இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர்.
இந்த சிறுத்தையைப் பிடிக்க கோவையிலிருந்து 2 கூண்டுகள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவும் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தையைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் மாலை மற்றும் இரவு அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தனியே நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் அப்பகுதி மக்களை எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் கும்கி யானைகளை ஈடுபடுத்தவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க: Heavy snowfall in Himachal: இமயமலை தேசத்தை மூடிய பனி!!