திருப்பூர்: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பின்னலாடை நிறுவனங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் நூல் தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 70 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் நட்டம் அடைந்து வருகின்றன.
இது குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் டீமா, சைமா உள்பட அனைத்து பின்னலாடை சங்கம், தொழிற்சங்கங்கள் இணைந்து, நேற்று (மார்ச். 15) ஒரு நாள் முழு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டன.
வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தின் காரணமாக 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறதென பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். எனவே அரசு விரைவில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க : 234 தொகுதிகளிலும் அதிமுக வாஷ் அவுட்: மு.க. ஸ்டாலின்