கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் 20 வயது பெண் ஒருவர் காணாமல் போனார். அப்பெண் ஹைதராபாத்தில் இருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து, கேரள சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நான்கு பேர் பெண்ணின் உறவினர்கள் இருவரை அழைத்துக் கொண்டு நேற்றிரவு ஹைதராபாத் புறப்பட்டுள்ளனர்.
அவர்கள் சென்ற வாகனம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் கண்ணயர்ந்ததால், ஆலம்பாளையம் பகுதியில் மேம்பால தடுப்பு சுவரில் மோதி வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்றொரு உறவினர் வினு கோபால் மற்றும் காவலர்கள் ராஜேஷ், விநாயகம், அருண், அனில்குமார் என ஐந்து பேர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.