திருப்பூர் ராயபுரம் பகுதியில் தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளி திறப்பு விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பள்ளியைத் திறந்து வைத்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "நீட் தேர்விற்கு சட்ட வடிவு கொண்டுவரும்போது ஆதரித்ததே திமுகதான், தற்போது அமல்படுத்தப்பட்டவுடன் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. திமுக எம்.பிக்கள் முயற்சி எடுத்து வெற்றிகரமாக விலக்கு பெற்றால் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வு முடிவைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திற்கும் 85 விழுக்காடு மருத்துவ படிப்பிற்கான இடம் அந்த மாநிலத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அந்த சலுகையினை மீறி இடம்பெற முடியும், முழுதாய் வேறு மாநிலத்தவர் பெற முடியாது" எனவும் கூறினார்.