திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் புதிதாக தனி வீடு, வணிக கடை, அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள், வணிக வளாக கட்டடம் கட்ட வேண்டும் என்றால், கட்டட அனுமதி, வரைபட அனுமதி ஆகியவற்றை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகத்தில் பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
ஆவணங்களை அலுவலர்கள் பரிசீலித்து கட்டடம் கட்டுவதற்கான அனுமதி அளிப்பார்கள். ஆனால் அங்கு நிலவும் அலுவலர்கள் பற்றாக்குறையால் அனுமதி பெறுவதற்கு பல மாதம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மன உளைச்சலை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், இந்த நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டத்தில் கட்டட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக கட்டடம் கட்ட விரும்புபவர்கள் மாநகராட்சி உரிமம் பெற்ற கட்டட அளவையர் அளித்த புதிய கட்டட வரைபடம், நிலத்திற்கான ஆவணங்கள், கட்டணம் ஆகியவற்றை வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செலுத்தலாம். அந்த விவரங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் எடுத்துக்கொண்டு நேரில் சென்று சரிபார்த்ததும் அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில், விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் ஆன்லைனில் அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
இதில் ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றாலும் ஆவணங்கள் விடுபட்டிருந்தாலோ அது பற்றிய விவரங்களும் உடனடியாக ஆன்லைனிலேயே கட்டட உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ற வகையில் ஆவணங்களை சரிசெய்து அனுப்பினால் கட்டடத்திற்கான அனுமதி ஆன்லைனிலேயே வழங்கப்படும். தற்போது இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ளது.
இதுகுறித்து கட்டட பொறியாளர் ஸ்டாலின் பாரதி கூறுகையில், "ஆன்லைனில் கட்டட அனுமதி அளிப்பது சிறந்த திட்டம். இது தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கேற்ற சாஃப்ட்வேர்கள் நிறுவவேண்டும் அப்போதுதான் எந்த தடங்கலும் இல்லாமல் கட்டட அனுமதி கிடைக்கும். மேலும் இதில் உள்ள இடர்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும். பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சர்வர் பிரச்னைகள் அதிகளவில் ஏற்படுகிறது. அதனை முறைப்படுத்த வேண்டும், அப்போதுதான் இந்த திட்டம் வெற்றிகரமாக இருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சிறிய அளவில் வீடு கட்டுபவர்களுக்கு இரண்டு மாதத்திற்குள் அனுமதி கிடைத்து விடுகிறது. ஆனால் வணிக வளாகம், பெரிய கட்டடம் ஆகியவை கட்டுபவர்களுக்கு அவ்வளவு எளிதாக அனுமதி கிடைப்பதில்லை. இதனை அலுவலர்கள் சரிசெய்ய வேண்டும். அரசு என்னதான் 30 நாட்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி அளிக்க வழங்கவேண்டுமென அறிவித்திருந்தாலும், திருப்பூர் மாநகராட்சியை பொருத்தவரை அனுமதி பெறுவதற்கு பல மாதங்கள் ஆகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் திருப்பூர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாநகராட்சி அலுவலகம் உள்ளூர் திட்டக் குழுமத்தில் போதிய அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை இதனை அரசு சரிசெய்ய வேண்டும், அப்பொழுதுதான் காலதாமதத்தை தவிர்க்க இயலும்" என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சுந்தரபாண்டியன் கூறுகையில், "தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே அரசு மக்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் பொதுமக்களும் நேரடியாக சென்று விண்ணப்பிக்காமல் ஆன்லைனில் விண்ணப்பிக்க கற்றுக்கொள்வார்கள். இதன்மூலம் இடைத்தரகர்கள் விண்ணப்பிக்கும் போது பெறப்படும் லஞ்சம் தவிர்க்கப்படும்.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, "ஆன்லைனில் கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு முறையாக இருக்கும் பட்சத்தில் 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது. ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் நேரடியாக விண்ணப்பதாரரின் இடத்திற்கே சென்று ஆய்வு செய்து கட்டடம் கட்ட அந்த இடம் தகுதிவாய்ந்ததா என்பது குறித்து பரிசீலனை செய்து விரைவில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஆதரவற்றோரின் அடைக்கலம், “உங்கள் வீடு”!