திருப்பூர்: திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் இலவச பயிற்சி துவக்க விழா இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்க புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதந்தோறும் 20 அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு காலை மாலை என இரண்டு வேலைகளிலும் இலவசமாக நீச்சல் பயிற்சிகளை அளிக்க உள்ளனர்.
இந்த பயிற்சி வேலம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் நடக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் நீச்சல் பயிற்சிக்காக ஆகும் செலவு அனைத்தையும் ரோட்டரி சங்கமே ஏற்றுக்கொள்வதோடு, ஆண்டு முடிவில் நீச்சல் பயிற்சியில் தகுதி பெரும் மாணவர்களை மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்க செய்ய உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீச்சல் பயிற்சியை துவக்கி வைத்து, நீச்சல் குளத்தில் மாணவர்களுடன் நீச்சல் அடித்து ஊக்கமும், தன்னம்பிக்கையும் ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களிடம் பேசிய ஆட்சியர், "நீச்சல் பயிற்சிகளை முடிக்கும் மாணவர்கள் ஆபத்து காலங்களில் நீரில் மூழ்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
தாங்கள் நீச்சல் பழகியதோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்ற மாணவர்களையும் நீச்சலில் பழக ஊக்குவிக்க வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார். அரசு பள்ளி மாணவர்களுக்காக நடந்த இலவச நீச்சல் பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் நீச்சல் குளத்தில் இறங்கியது மாணவர்களிடையே மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 22 சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்கவில்லை - சென்னை மாநகராட்சி!