கேரளாவில் மழை பெய்துவருவதால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் அமராவதி அணை வறண்டு காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் மொத்தம் 90 அடியில், 25 அடிக்கும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துவருவதால், அணையில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக உயர்ந்து 36 அடியாக உயர்ந்துள்ளது.
ஒருவாரத்திற்குள் அணையின் நீர்மட்டம் எட்டு அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 36.03 அடியாகவும், அணையின் நீர்வரத்து வினாடிக்கு 292 கன அடியாகவும் உள்ளன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், "2019ஆம் ஆண்டு கோடை மழை நல்ல முறையில் பெய்ததோடு, தென்மேற்கு பருவமழையும் முன்னதாகவே தொடங்கியதால், ஜூன் மாதம், 65 அடி வரை நீர்மட்டம் இருந்தது. இந்தாண்டு மழை குறைவாகவே உள்ள நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை தொடர்ந்தால் மட்டுமே படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் உயரும்" எனத் தெரிவித்தனர்.
அமராவதி அணையை நம்பி ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசனத்திற்காக காத்திருக்கும் நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்வதற்குத் தாமதமான நிலையில், தென்மேற்கு பருவ மழையால் அணை நிரம்ப வேண்டும் என விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'ஏரியை வைத்து அரசியல் செய்கிறார்'- எம்.பி. குற்றஞ்சாட்டுக்கு அமைச்சர் பதில்!