திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மத்திய அரசின் ஃபிட் இந்தியா திட்டத்தின் கீழ் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியில், சிறப்பு விருந்தினராக திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "காலங்கள் மாற மாற மனிதனின் வசதியும் மனநிலையும் மாறிவருகிறது. ஒவ்வொருவரும் தன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும், தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றார்.
பின்னர், மாணவ செயலர் சந்தோஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியானது கல்லூரியில் தொடங்கி புஷ்பா தியோட்டர் வழியாக டவுன் ஹால், எம்ஜிஆர் சிலை, பார்க் ரோடு, நஞ்சப்பா பள்ளி, ரயில் நிலையம் ஆகிய பகுதிகள் வழியாக மீண்டும் கல்லூரியைச் சென்றடைந்தது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை வழியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷம் போட்டும் சென்றனர். பேரணியை தொடக்கிவைத்தது மட்டுமல்லாமல், பேரணியில் மாணவர்களுடன் குணசேகரன், வடக்கு காவல் உதவி ஆணையர் வெற்றிவேந்தன், காவல் ஆய்வாளர் கணேஷ் உள்ளிட்டோர் சைக்கிளும் ஓட்டினர்.
இதையும் படிங்க: ராட்சத ஹீலியம் பலூனில் காவலன் செயலி விழிப்புணர்வு