திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சர்வேயர் தோட்டம் பகுதியில் விவசாயம் செய்து வருபவர் பழனிச்சாமி (75). இவரது மகன் ராஜேந்திரன் (47). இவர்கள் வீட்டுக்கு அருகே உள்ள விவசாயக் கிணற்றில் மின் மோட்டார் பழுதாகியுள்ளது. இதை சரிசெய்வதற்காக தந்தை-மகன் இருவரும் கிணற்றில் பொருத்தியிருந்த கிரேனின் இரும்பு வடக்கம்பி மூலம் கிணற்றில் இறங்கியுள்ளனர்.
கிரேனை ராஜேந்திரனின் மகன் ராகுல் இயக்கியுள்ளார். இருவரும் அதன் மூலம் 5 அடி தூரம் கீழே இறங்கிய நிலையில், திடீரென இரும்பு வடக்கம்பி அறுந்ததில் இருவரும் கிணற்றினுள் விழுந்துள்ளனர். 80 அடி ஆழமுள்ள கிணற்றில் வெறும் 2 அடிக்கு மட்டும்தான் தண்ணீர் இருந்ததால், வேகமாக தலைகுப்புற விழுந்ததில் இருவருக்கும் தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமாகியுள்ளனர்.
பின்னர் ராகுல் கூச்சலிடத் தொடங்கியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றிக்குள் இறங்கிய போது இருவரும் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து இருவரின் சடலங்களையும் காங்கேயம் காவல் துறையினர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.