திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் விவசாய நிலங்களில் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்வரை விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிக்கக் கூடாது, அதேபோல் விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் தற்போது காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட சிவன்மலை, கீரனூர், மரவாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .
அதனை எதிர்த்தும் உடனடியாக அந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர். விவசாயிகள் ஒரு சிலர் மட்டுமே சென்று மனு அளிக்க, காவல் துறை வற்புறுத்தியதால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு சில விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின் தற்காலிகமாக விசாரனை ரத்து செய்யப்பட்டுவதாக வருவாய் அலுவலர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ’தீயினால் சுட்டப் புண்’- சிறுமிக்கு திருக்குறள் கற்றுக் கொடுத்த ஆர்எஸ்எஸ் தலைவர்