திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கல்நார்சம்பட்டி பகுதியில் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். தங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவந்த அவர், தனது வீட்டுக்கு தனியாக குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவேண்டும் என ஊராட்சி செயலரிடம் பலமுறை முறையிட்டுள்ளார். ஆனால், ஊராட்சி செயலர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவிந்தசாமி ஊராட்சி செயலரைக் கண்டித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது, அருகிலிருந்தவர்கள் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனைத் தட்டிவிட்டு அவரையும், அவரது குடும்பத்தினரையும் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோவிந்தசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வசதி கேட்டு குடும்பத்துடன் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் 14 காவலர்கள் உள்பட 156 பேருக்கு கரோனா பரிசோதனை