திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள வெங்கிட்டிபாளையம் அருகே மூட்டை முடிச்சுகளுடன் 30க்கும் மேற்பட்டோர் நடந்து வருவதாக தாராபுரம் தாசில்தாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, பூளவாடி சாலை பிரிவு அருகே நடந்து வந்தவர்களை வழிமறித்த தாசில்தார் கனகராஜன் தலைமையிலான வருவாய் மற்றும் காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தாராபுரத்தை அடுத்த குண்டடம் மேட்டுக்கடை பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை நடைபெற்று வருவதாகவும், அங்கு தினக்கூலி பணியாளர்களாக வேலை செய்ய திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி கிராமத்தில் இருந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மேட்டுக்கடை வந்து தங்கி வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாய பணிகள் முடிந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக விவசாய வேலைகள் இன்றி சொந்த ஊருக்கு செல்ல முடியால் கையில் இருக்கும் காசுகளை வைத்து தவித்து வந்ததாகவும், போக்குவரத்துக்கு எந்த வசதியும் இல்லாத நிலையில் நடந்தே தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து நடந்து வருவதும் தெரியவந்தது.
உண்ண உணவின்றி நடந்து வந்த 9 ஆண்கள், 13 பெண்கள், 7 குழந்தைகள் உள்பட 29 பேரையும் தனியாக ஒரு லாரியில் ஏற்றி தாராபுரத்தில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் தங்க வைத்துள்ள வருவாய்த்துறையினர், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், அவர்களுக்கு கரோனா தொற்றுக்கான கண்டறிதல் சோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனைகளின் முடிவு வந்ததும் மாவட்ட நிர்வாகத்தின் முடிவின் படி அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த் துறை தர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ட்ரோனுடன் ஓர் கண்ணாம்பூச்சி: திருப்பூர் பாய்ஸை ஓவர்டேக் செய்த சேலம் பாய்ஸ்