திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் , திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன் , காங்கேயம் தொகுதி ராமலிங்கம் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், "அதிமுகவை எஃகு கோட்டையாக மாற்றியவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, அவர் ஒவ்வொரு திட்டத்தையும் அடித்தட்டு மக்களுக்காக உருவாக்கினார். 2023ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். இலவச இருசக்கர வாகனம் அளித்த காரணத்தால், பெண் வண்டி ஓட்ட, ஆண்கள் அமர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியாரின் ஆணுக்கு பெண் சமம் என்ற கனவு நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆட்சி காலத்தில் 45 ஆயிரம் கோடியாக இருந்த தொழிற்சாலைகள், தற்போது 6 லட்சத்து 85 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு. அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு. அதுதான் செல்லும். தற்போதைய அதிமுக ஆட்சியில் , மக்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு எங்கும் சிறப்பாக உள்ளது, சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக உறுதுணையாக உள்ளது.
திமுக எதிர்கட்சி. நாம் ஆளும்கட்சி. நாம் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறோம். ஆளும் கட்சியாக இருந்தபோது திமுகவினர் நடத்திய நில அபகரிப்பை அடக்கியது ஜெயலலிதா தான். மின்சாரம் என்றதுமே ஆற்காடு வீராச்சாமி தான் நினைவிற்கு வருகிறார். அவர் மின் தட்டுப்பாடை சமாளிக்க முடியாமல் திணறினர்" என்றார்.