திருப்பூர்: கோவையிலிருந்து சேலம் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுக தொண்டர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், "இன்றைக்கு அத்திக்கடவு அவிநாசி திட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. முதற்கட்ட பணி மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. எனது தலைமையிலான அரசு எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் அது முழுமை பெறும். திருப்பூரில் மருத்துவக் கல்லூரியுடன் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 71 கோடி ரூபாயில் அன்னூர்- மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புஷ்பா திரையரங்கம் முதல் பாண்டியன் நகர் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்படவுள்ளது.
அண்மையில், எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, விவசாயியை ரவுடியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது விவசாயிகளைத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய அரசு திமுக.
அவர்களுக்கு, விவசாயிகள் குறித்துப் பேசத்தகுதியில்லை. அதிமுக அரசு அமல்படுத்திய நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு விருதைப் பெற்றுள்ளது. ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது குறை கூறிவருகிறார். மக்களுக்காக உழைக்கிற அரசு அதிமுக அரசு. ஸ்டாலின், திமுகவினர் கூறும் பொய்களை நம்பாதீர்கள்.
தற்போது, செயல்படுத்த இயலாத திட்டங்களை ஸ்டாலின் கூறிவருகிறார். இப்படித்தான் மகா பொய்களைக் கூறி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றனர். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏராளமான தில்லுமுல்லு வேலைகளை திமுகவினர் செய்வார்கள்.
மக்கள் ஏமாந்து விடக்கூடாது. தொழிற்சாலை, மருத்துவ, சாலை வசதிகளில் இந்தியாவிலே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அவினாசியில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கு நிலம் எடுக்கப்படாது என உறுதியளிக்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: துரைமுருகன் கல்லூரி சுவற்றைத் தட்டினால் ‘ஊழல்... ஊழல்’ என்று சத்தம் வரும் - முதலமைச்சர் தாக்கு