திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி தலைவியாக இருப்பவர் செல்வி. இவருடைய கணவர் ரமேஷ் பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
அதே பகுதியில் ஆறாவது வார்டு ஊராட்சி உறுப்பினராக இருப்பவர் குப்புசாமி. இவர் பஞ்சாயத்து அலுவலக பணியில் இருந்தபோது செல்வியை தகாத முறையில் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
எனினும் அந்தப் புகாரின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குப்புசாமி என்பவர் மீது தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்த பின்னர் எவ்வித விசாரணையும் காவல் துறையினர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகவே, இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை வேறு அலுவலருக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளோடு தேசிய சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்தவர்கள் இன்று (ஆக25) திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதில், மேற்கண்ட புகாரைத் திரும்பப் பெறச் சொல்லி தாராபுரம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், குப்புசாமி, தேவா ஆகிய மூவரும் தங்களை தனியார் மண்டபத்தில் வைத்து மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவி மிரட்டப்பட்ட விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்!