இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி வெளியிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர்தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவார்கள். பாஜக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது. இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள் , கருப்புப் பணம் மீட்டெடுப்பு , பண மோசடியில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என பல்வேறு விஷயங்களில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது.
வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் அனைவரும் மோடியின் நண்பர்கள். பாலகோட் தாக்குதல் குறித்து ஆதாரம் தரும்படி ராணுவத்தினரை நாங்கள் கேட்கவில்லை. ஆனால், தாக்குதலின்போது இத்தனை வீரர்கள் உயிரிழந்ததாக அமித்ஷா கூறியது எப்படி என்றுதான் கேள்வி எழுப்புகிறோம். அமித் ஷாதான் ராணுவத்திற்கு தலைமையா? பாஜக-வின் மிரட்டலுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது.
தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருக்கவேண்டும். ஆனால், தேர்தல் விதிகளை மீறிய யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுவது தவறான செயல். ராகுல் பாஜகவிற்கு எதிரானவரா? இல்லை இடதுசாரிகளுக்கு எதிரானவரா? என குழப்பம் ஏற்படுகிறது. ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது சரியானதல்ல” என்றார்.