திண்டுக்கல்லில் இருந்து கோவை செல்லும் பேருந்து பழனியில் நின்றுகொண்டிருந்தபோது குடிபோதையில் செந்தில் நாதன் என்பவர் அந்த பேருந்தில் ஏறியுள்ளார். அவர் ஒரு பேருந்து நிறுத்தத்தை கூறி டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு, விரைவு பேருந்து என்பதால் இந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என்று நடத்துநர் காஜா கூறியுள்ளார். இதனால், உடனடியாக செந்தில்நாதன் பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த செந்தில்நாதன், உடுமலைக்கு அப்பேருந்து வருவதற்கு முன்பே சென்று அங்கு காத்திருந்தார். அந்த விரைவுப் பேருந்து உடுமலை பேருந்து நிலையத்துக்குள் வந்தது. இதையடுத்து, அந்தப் பேருந்தில் செந்தில்நாதன் ஏறி, நடத்துநர் காஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் காஜாவினை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அவரை தகாத வார்த்தையிலும் திட்டியுள்ளார். கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதில், காயமடைந்த காஜாவுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடுமலை பேருந்து நிலையத்தில் நடத்துநர் ஒருவர் பயணியால் தாக்கப்பட்ட சம்பவம், போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.