திருப்பூர் தென்னம் பாளையம் காய்கறி சந்தை, அம்மா உணவகத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாநகர ஆணையர் சிவக்குமார், சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வின்போது சமூக இடைவெளியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்தோர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 1156 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் இவர்கள் இருப்பார்கள் எனக் கூறினார்.
மேலும், சமூக இடைவெளியை உறுதிசெய்ய பொதுமக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் மளிகைக் கடைகள், சிறப்பு அங்காடி எண்கள் பகிரப்பட்டு உள்ளதாகவும் இதன்மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை ஆர்டர்செய்து குறிப்பிட்ட நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும், பொருள்கள் விலை உயர்த்தி விற்பனைசெய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும், காய்கறிகள் விவசாய பிரிவு அலுவலர்கள் மூலம் விலை நிர்ணயம்செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கு மேல் விலை உயர்த்தி விற்பனை செய்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்று விற்பனைசெய்பவர்கள் குறித்து புகார் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.