திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ’செப்டம்பர் மாத இறுதிக்குள் தமிழ்நாடு முழுவதும் 9 முதல் 12-ஆம் வகுப்புகள் இணையதள வசதியுடன்கூடிய கணினிமயமாக்கப்பட்ட வகுப்பறைகளாக மாற்றப்படும். மாணவர்களிடையே விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் வகையில் பல லட்சம் செலவில் 5 ஆண்டுகள் செயல்படக்கூடிய அளவில் அட்டல் டிங்கர் ஆய்வகம் செயல்படுத்தப்படும். மலேசியாவில் உள்ள தன்னார்வல அமைப்பு மூலம் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் புக்கிற்கு அடுத்தபடியாக டேப்லெட் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தொடர்ந்து, பல்லடம் பகுதியில் பவர் கிரிட் நிறுவனம் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகளை காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், விவசாய நிலங்களில் டவர் அமைப்பது குறித்து ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் விளக்கம் அளித்திருப்பதாகவும் பல்லடம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து மீண்டும் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.