திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). இவர் மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் நிதி நிறுவனம் நடத்திவந்தார். இவருக்கு வசந்தாமணி (42) என்ற மனைவி, பாஸ்கர் (27) என்ற மகன், சரண்யா (25) என்ற மகள் உள்ளனர்.
இதில் சரண்யாவுக்கு திருணமாகி கணவர் கவுசிக்குடன் (30) தாசநாயக்கனூரில் வசித்துவருகிறார். இந்த நிலையில் பாஸ்கருக்கு திருமணம் பேசி முடித்து வருகின்ற 1ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இதையடுத்து திருமண பத்திரிக்கையை உறவினர்களுக்கு செல்வராஜும் அவருடைய மனைவியும் காரில் சென்று கொடுத்துக்கொண்டிருந்தனர்.
கடைசியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமாரவலசில் உள்ள செல்வராஜின் உடன் பிறந்த மூத்த சகோதரி கண்ணம்மாளுக்கு (54) கொடுக்கச் சென்றுள்ளனர். அங்கு பத்திரிக்கை கொடுத்துவிட்டு புறப்படுவதாக செல்ஃபோனில் செல்வராஜ் தனது மகன் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பின், தம்பதி குறித்து எந்தத் தகவலும் இல்லை. இவர்கள் சென்ற கார், கரூர் அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூரில் அனாதையாக நின்றுகொண்டிருந்தது. இந்தக் காரைச் சுற்றி மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. மேலும் காருக்குள் திருமண பத்திரிக்கைகள் சிதறிக்கிடந்தன. இதையடுத்து தனது தாய், தந்தையை காணவில்லை என வெள்ளகோவில் காவல் நிலையத்தில், பாஸ்கர் புகார் செய்தார்.
அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஏற்கனவே பாஸ்கர் கூறிய தகவலின்படி, செல்வராஜ் தனது மனைவியுடன் கடைசியாக பத்திரிக்கை கொடுத்த கண்ணம்மாளிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்று உத்தாண்டகுமாரவலசில் உள்ள கண்ணம்மாள் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றனர்.
அங்கு வீட்டிலிருந்த கண்ணம்மாளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்துள்ளார். மேலும், அவருடைய வீட்டின் அருகே புதியதாக குழி தோண்டப்பட்டிருப்பதும் குழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும் காவல் துறையினர் கவனித்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த காவல் துறையினர் அந்தக் குழியைத் தோண்டி பார்த்தபோது, அதில் செல்வராஜும் அவருடைய மனைவியும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து கண்ணம்மாளிடம் மேற்கொண்ட விசாரணையில், செல்வராஜின் தந்தை காளியப்பனுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தை செல்வராஜின் மகன் பாஸ்கர் பெயரில் காளிப்பன் உயில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அந்த நான்கு ஏக்கர் நிலத்தை ரூ.43 லட்சத்திற்கு செல்வராஜ் விற்பனை செய்துள்ளார். அதில் பங்கு வேண்டும் என்று கண்ணம்மாள் கேட்டதனால் செல்வராஜுக்கும் அவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ரூ. 5 லட்சமாவது கொடுக்குமாறு கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் அந்தப் பணத்தையும் கொடுக்க மறுத்ததோடு ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கண்ணம்மாள் பாஸ்கரின் திருமண பத்திரிக்கை கொடுக்கவந்த செல்வராஜையும் அவருடைய மனைவியையும் மருமகன் நாகேந்திரனுடன் சேர்ந்து தலையில் அம்மி கல்லைப்போட்டு கொன்றுள்ளனர். பின்னர், இருவரின் உடலையும் வீட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்ததாகக் காவல் துறையினரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்தக் கொலை தொடர்பாக கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரும் காவல் துறையிடம் சிக்கியுள்ளனர். அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: 'சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - சீறிய திருநாவுக்கரசர்!