திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடந்த 21ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் வங்கியின் லாக்கரை உடைத்து 250 சவரன் நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் சந்தேகப்படும்படியான அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் என்பவரைக் காவல் துறையினர் கைது செய்து தனிப்படை காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, தனிப்பிரிவு காவல் துறையினர் டெல்லி சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில், அனில்குமார் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளையடித்து இருப்பதும், அவரே திருப்பூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை இன்று பல்லடம் அழைத்து வந்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பத்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஆறு நாள்களுக்கு அனுமதி கொடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மகளிர் தின வாழ்த்துகள்' கூறிய முதலமைச்சர் பழனிசாமி!