திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணி முடித்து திரும்பிய 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா தொற்று பரிசோதனைக்காக கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் முடிவுகள் நேற்று இரவு (ஏப். 11) வெளிவந்தது.
இதில், அவிநாசியை அடுத்து கருவலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆண் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தை மூன்று நாள்கள் மூட உத்தரவிடப்பட்டது.
அதன்படி, வட்டாட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் அவிநாசி பேரூராட்சி சுகாதார ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் உள்ள இணைய சேவை மையம், ஆதார் மையம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கிளைச் சிறை ஆகியவை வழக்கம்போல் செயல்படுகின்றன. வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமே மூன்று நாள்கள் மூடப்படுகிறது.
இந்த அலுவலகத்தில் சுமார் 12 அலுவலர்கள் பணியாற்றிவருகின்றனர். தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவிநாசி பேரூராட்சி சுகாதாரத் துறை சார்பாக அவிநாசி நகரின் முக்கியச் சாலைகளில் லாரி மூலம் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே நாளில் 1.68 லட்சம் பேருக்கு கரோனா