திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் தியாகி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று (மார்ச் 24) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சந்திரன் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி அவரை கைது செய்தனர்.
இது குறித்து சந்திரன் கூறுகையில், "தனது சகோதரன் குமார், தாயார் தனலட்சுமியை ஏமாற்றி ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதிக் கொண்டே தாயை அடித்து துன்புறுத்தி வருகிறார். இதுகுறித்து காவல் துறை, மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே தனது சகோதரன் குமாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்துக்களை மீட்டு தரவேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தேன்" என்றார். இதையடுத்து, காவல் துறையினர் சந்திரனை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாடகை பிரச்னையில் தீக்குளித்த சம்பவம்: சிசிடிவி காட்சி வெளியீடு!