திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகம் கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் அதிக அளவில் பத்திரப் பதிவு நடைபெறும் அலுவலகமான இங்கு, லஞ்சம், ஊழல் மலிந்து காணப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. தட்சிணாமூர்த்தி தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனால் பத்திரப்பதிவு செய்யும் பணி பாதிக்கப்பட்டது. மூன்று மணி நேரத்திற்கும் மேல் நடந்த ஆய்வு முடிவில், கணக்கில் வராத 16 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக சார்பதிவாளர்கள் உதயகுமார், சத்தியமூர்த்தி, அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த இரண்டு முறை இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை அடுத்து சார்பதிவாளர்கள் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.