திருப்பூர் மாவட்டம், வாலிபாலையம் சடையப்பன் கோவில் அருகில் கடந்த 1970ஆம் ஆண்டு திருப்பூர் நகராட்சியால் காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டது. கடந்த 1975ஆம் ஆண்டு காய்கறி மார்க்கெட் கட்டடத்துடன் தனியார் பள்ளி நடத்த பிரேமா ரவி என்பவருக்கு, 150 ரூபாய் குத்தகைக்கு விடப்பட்டது.
பின்னர், கடந்த 1982ஆம் ஆண்டு நகராட்சி சார்பில் பள்ளிக்கட்டடத்தைக் காலி செய்ய கோரியபோது பள்ளி நிர்வாகம் காலி செய்ய மறுத்து நீதி மன்றத்தை அணுகியது. இதைதொடர்ந்து, நீதிமன்றத்தில் பல வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டு வழக்கில் மாநகராட்சிக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் சுப்பிரமணி, தங்கவேல் ராஜ், மற்றும் உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று(ஜூலை.27) காலை பள்ளிக் கட்டடத்தைக் காலி செய்து இடித்து அகற்றினர்.
இதன் மூலம் 38 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.3 கோடி மதிப்பிலான மாநகராட்சி சொத்து மீட்கப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர் ஜோதி ஆகியோருடன் காவல்துறையினரும் உடனிருந்தனர்.