திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு என்கிற மாணிக்கம்(73). கூலித்தொழிலாளியான இவருக்கு ஜோதிமணி என்ற மனைவியும், செல்வராஜ், நாகராஜ், பாபு, ரமேஷ் என்ற நான்கு மகன்களும் உள்ளனர்.
இதனிடையே மாணிக்கத்தின் பெயரில் சேடப்பாளையம் குமரன் கார்டன் பகுதியில் பல லட்சம் ரூபாய்மதிப்பிலான நிலம் மற்றும் வீடு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை மூத்தமகன் செல்வராஜ் மற்றவர்களுக்கு தெரியாமல் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்த விபரம் தெரியவந்ததால் செல்வராஜிடம் சென்று நியாயம் கேட்ட மற்ற சகோதரர்கள், இது தொடர்பாக பல்லடம் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
இந்நிலையில் இன்று காலை மாணிக்கம் மற்றும் அவரது மூத்த மகன் செல்வராஜ் ஆகியோரிடையே நிலப்பிரச்னை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே வாக்குவாதம் முற்றவே செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, மாணிக்கத்தைத்தனது தந்தை என்றும் கூட பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த மாணிக்கம் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த பல்லடம் காவல்துறையினர், தந்தையை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிய மகன் செல்வராஜ் உள்ளிட்ட இரண்டு பேரை வலை வீசித்தேடி வருகின்றனர்.