திருநெல்வேலி சேரன்மாதேவி நகரைச் சேர்ந்தவர் முருகன் (31). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (22) ஆகிய இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களது காதல் திருமணத்திற்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தம்பதியர் வீட்டை விட்டு வெளியேறினர்.
இத்தகைய சூழலில் சில மாதங்களுக்கு முன்பு கவிதா கர்ப்பமாகிய நிலையில் அவருக்கு கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, நவ. 18ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேவுள்ள மொட்டரப்பாளையம் கிராமத்துக்கு வந்த அவர்கள் வாடகைக்கு வீட்டில் குழந்தையுடன் மூன்று மாதங்கள் வசித்துவந்தனர்.
இந்நிலையில், வீட்டுச்சூழல் காரணமாக இருவரும் குழந்தையைத் தொடர்ந்து வளர்க்க முடியாது எனக் கருதி, பிறந்த குழந்தையை விற்க முடிவுசெய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, காங்கேயம் அடுத்துள்ள கீரனூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (40), விஜி (34) தம்பதியருக்கு குழந்தையை விற்க முடிவுசெய்தனர். பின்னர், இரு தினங்களுக்கு முன்பு முருகன், கவிதா தம்பதி குழந்தையை 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளனர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உடனடியாக காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய ஆய்வாளர் ஹேமலதா தலைமையிலான மகளிர் காவல் துறையினர், சம்பவம் தொடர்பாக நேற்று (நவ. 25) கவிதா, விஸ்வநாதன், விஜி ஆகியோரைக் கைதுசெய்தனர்.
தொடர்ந்து, குழந்தையை மீட்ட காவல் துறையினர், குழந்தையை காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள முருகனை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: அலட்சியம்...! 70 நாள்களுக்கு பிறகு கை குழந்தை தொடையிலிருந்து எடுத்த தடுப்பூசி துண்டு!