திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் சம்பவ இடத்திலிருந்த பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கருப்பு நிற பல்சர் பைக் உள்பட இரண்டு இருசக்கர வாகனங்களையும், ஹெல்மெட்டையும் பறிமுதல் செய்தனர். அப்போது ஹெல்மெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் விபத்து தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர் மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி கண்மணி என்ற மனைவியும் நான்கு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கையில், சதீஷ்குமார் தனது சிவப்பு நிற பல்சர் வாகனத்தில் பல்லடம் - தாராபுரம் சாலையில் தனது நண்பர் மணியுடன் சென்றபோது, எதிரே வந்த பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கருப்பு நிற பல்சர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.
மேலும் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கருப்பு நிற பல்சர் பைக்கில் வந்தவர் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனிடையே கஞ்சா கடத்தி வந்தது யார் என்பது பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஐந்தாயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்!