திருப்பூர் தாராபுரம் சாலை பொங்குட்டிபாளையம் டி. ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த செம்மலை என்பவரது மகன் தமிழரசன் (16). இவர், திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். காங்கேயம் படியூர் நல்லிபாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் பூபதி (18). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தமிழரசனும் பூபதியும் நண்பர்கள்.
இந்நிலையில், நேற்று நண்பர்கள் ஏழு பேரோடு, தாராபுரம் சாலையில் ஆண்டிபாளையம் பிஏபி வாய்க்காலில் இருவரும் குளிக்கச் சென்றனர். இவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியாது.
அங்கு, தமிழரசனும், பூபதியும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். மற்றவர்கள் கரை அருகே சுவரைப் பிடித்துக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென தமிழரசனும், பூபதியும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து, நண்பர்கள் காப்பாற்ற முயல்வதற்குள் தண்ணீரில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பாக குளிக்கச் சென்றவர்கள் உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்றவர்கள் உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறைக்கும், அவிநாசிபாளையம் காவல் துறைக்கும் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ஏ.சண்முகம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இரண்டரை மணிநேர தேடுதலுக்கு பிறகு தமிழரசன் சடலத்தை கிருஷ்ணாபுரம் மதகு பகுதியிலும், பூபதியின் சடலத்தை கண்டியன் கோயில் கருவேலங்காட்டுத் தோட்டப் பகுதியிலும் மீட்டனர். இதையடுத்து இருவரது சடலமும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.