ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத். இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டைலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு இன்று சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், குடும்ப தலைவிக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தரப்படும். மக்கள் அனைவரும் மருந்தாக சாப்பிடும் மதுவை, புதுச்சேரியில் இருந்து சுத்தமாக இறக்குமதி செய்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் கண்டிப்பாக வழங்குவேன்' என்றார்.
மேலும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கண்டிப்பாக அரசு வேலை வழங்கப்படும். ஏழைப் பெண்களுக்கு 10 சவரன் நகை மற்றும் தனது எம்பி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கி இலவசமாக திருமணம் செய்து வைக்கப்படும் என்றார்.
ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இறுதிவரை கக்கனை போல பாடுபடுவேன் என்று கூறிய அவர், மேட்டூரில் இருந்து திருப்பூருக்கு வாய்க்கால் வெட்டி குடிநீர் வழங்குவேன்' என்று கூறினார். நாடாளுமன்ற சுயேட்சை வேட்பாளர் இப்படி கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருப்பது, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.