திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்தில் இருந்தவர்கள் தங்களை வங்கி ஊழியர்கள் என்றும், வங்கி பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தபோது, கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் இருந்து ரூ.10 கோடி ரொக்கப்பணம், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்படுவதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டையை தூத்துக்குடி மாவட்டம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால் ஆவணங்கள் போலியாக இருக்கலாம் என சந்தேகித்த பறக்கும் படையினர், வாகனத்துடன் ரூ. 10 கோடி பணத்தையும் பறிமுதல் செய்து பல்லடம் வட்டாட்சியர் சாந்தியிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணம் பறிமுதல் செய்யப்பட்ட தகவலறிந்த வங்கி அதிகாரிகளும் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
விரைந்து வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் 9 மணி நேர சோதனைக்குப் பிறகு பிடிக்கப்பட்ட பணம் மெர்கன்டைல் வங்கிக்கு சொந்தமானது என்றும், புதுக்கோட்டை என்ற ஊர் அதிக அளவில் அறியப்படாததால் ஏற்பட்ட குளறுபடி என்றும் தெரியவந்தது. இதனையடுத்து வங்கி அதிகாரிகளிடம் ரூ.10 கோடியும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் ரூ.10 கோடி, கோவை கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திருப்பூரில் ரூ. 10 கோடி ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும்படை குழுவினரால் பிடிக்கப்பட்டு, திரும்ப ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.