திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த களத்தூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர் விக்னேஷ்.
நேற்று (நவம்பர் 4) விக்னேஷ் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கிற்கு மாடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விக்கி (24), திருமலை (18), பவித்ரன் (18) என்னும் மூன்று இளைஞர்கள் மதுபோதையில் இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்துள்ளனர்.
ஓசியில் பெட்ரோல் கேட்ட போதை ஆசாமிகள்
அப்போது பங்க் ஊழியர் விக்னேஷிடம் தங்களுக்கு தீபாவளிக்கு இலவசமாக பெட்ரோல் வழங்க வேண்டும் என மூன்று இளைஞர்களும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விக்னேஷுக்கும் இளைஞர்களுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், நாங்கள் மாடப்பள்ளி ரவுடிகள். எங்க கிட்டவே பணம் கேட்கிறாயா. நீ தீபாவளிக்கு பணம் தா என்று கூறியுள்ளனர். அதற்கு விக்னேஷ் பணம் தரமறுக்கவே ஆத்திரத்தில் இளைஞர்கள் அவரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த விக்னேஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் மூன்று இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அடியாட்கள் மூலம் வீட்டைவிட்டு துரத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை