வாணியம்பாடி: தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரின் மனைவி தேவி (இருவரின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைகள் பிறந்து 7 மாதங்களாகியும் தேவியின் தாயார் வீட்டில் சீர் செய்யவில்லை என அவரது மாமியார் குறைபட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதியன்று புத்துக்கோவிலில் இருந்து, தெக்குப்பட்டு பகுதிக்குச் சென்ற தேவி, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னிடமிருந்து 5 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றுவிட்டதாக புகார் கூறினார். இது தொடர்பாக அம்பலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் குறுக்கு விசாரணையில் சிக்கிய தேவி உண்மையை ஒப்புக்கொண்டார். 7 ஆண்டுகளுக்குப் பின் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், பெற்றோர் சீர் செய்ய வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் கூறினார்.
இதனால் மாமியார் வீட்டில் வசைப்பேச்சை தவிர்ப்பதற்காக திட்டமிட்ட தேவி, தனது பெற்றோர் நகை தந்ததாகவும், வரும் வழியில் வழிப்பறி நடந்ததாகவும் பொய்யான புகாரை அளித்ததாக ஒப்புக்கொண்டார். தேவியின் நிலையை அறிந்த போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.