திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகணேசன் (27) ஆவடியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயகணேசன் கடந்த 7 வருடமாக கீழ்முருங்கை பகுதியை ரம்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்களின் காதலுக்கு ஜெயகணேசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயகணேசன் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆவடி ஆயுதப்படையில் காவலராக பணிக்குச் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி ஜெயகணேசனுக்கு மற்றொரு பெண்ணுடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஆவடியிலேயே இருந்த ஜெயகணேசன் இன்று தனது கீழ்முருங்கை பகுதிக்கு வந்துள்ளார்.
இதனையறிந்த ரம்யா 7 ஆண்டுகளாகத் தன்னை காதலித்து ஏமாற்றி கர்ப்பாக்கிவிட்டு தற்போது மற்றொரு திருமணம் செய்தது குறித்து நியாயம் கேட்டு ஜெயகணேசனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈட்டுப்பட்ட போது ஜெயகணேசனின் உறவினர்கள் ரம்யாவை தாக்கியுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈட்டுப்பட்ட பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று ரம்யாவிடம் விசாரணை மேற்கொண்டு தலைமறைவாகியுள்ள ஜெயகணேசனை தேடி வருகின்றனர்.
7 வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்த பெண்ணை கர்ப்பாக்கிவிட்டு தற்போது மற்றொரு பெண்ணை காவலர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகர் தாடி பாலாஜி மனைவி மீது வழக்குப்பதிவு