திருப்பத்தூர்: இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியைச்சேர்ந்தவர், மறைந்த முன்னாள் 1ஆவது வார்டு கவுன்சிலர் லியோ பிரான்சிஸ். இவரது மனைவி கேத்தரின் ஜார்ஜனா. இவர்களுக்கு ஆலிஸ் அக்சிலியா எவாஞ்சலின், ரோஷினி ஆகிய இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆலிஸ் அக்சிலியா இந்து மதத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது கரோனா அலை வந்தபோது, இவரது தந்தை லியோ பிரான்சிஸ் உயிரிழந்த நிலையில் தாய் கேத்தரின் ஜார்ஜனா தன்னுடைய இளைய மகளுடன் சேர்ந்து போலி வாரிசு சான்றிதழ் வாங்கியுள்ளார். அதனையடுத்து, திருப்பத்தூர் அடுத்த லக்கி நாயக்கன்பட்டி மற்றும் ஆவல் நாயக்கன்பட்டி பகுதியில் இருக்கும் அவர்களுக்குச் சொந்தமான சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தனியார் வங்கியில் 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
இதனையறிந்த மூத்த மகள் ஆலிஸ் ஆக்சிலியா இது குறித்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையிட்டார். அதன் பேரில் தாயும் தங்கையும் பத்திரப்பதிவு செய்தது போலி என்று கண்டறிந்தனர். ஆனால், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆலிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலிஸையும், அவருடைய குடும்பத்தாரையும் மீண்டும் மீண்டும் விசாரணை என்கிற பெயரில் மாதக் கணக்கில் வரவழைத்து அலைக்கழித்து கொண்டிருப்பதால் மன உளைச்சல் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆலிஸ் ஆக்சிலியா தன்னுடைய தாய் மீதும் தங்கை மீதும் மாவட்ட சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது இரு கை குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: போராட்டத்தின்போது யானையுடன் ஓட்டுநர்கள் செல்பி