திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா குறித்த ஆய்வு கூட்டம் நேற்று (மே.27) நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்படப் பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அமைச்சரிடம் தன்னார்வலர்கள் வழங்கினர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், " மேகதாது அணை கட்டுவது தொடர்பான பசுமை தீர்ப்பாயத்தின் வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்காது.
திருப்பத்தூரில் ஒரு மருத்துவக் கல்லூரியும், ராணிப்பேட்டையில் ஒரு மருத்துவக் கல்லூரியும் அமைப்பது குறித்து நிச்சயமாக முதலமைச்சரிடம் எடுத்துரைத்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலகட்டம் முடிந்தவுடன், தொழில்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்து இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
கடந்த காலத்தில் ஏரிகளைத் தூர்வாருவதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இம்முறை மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமனம் செய்துள்ளோம். ஏரி, குளம் தூர்வாரும் பணியானது எனது கண்காணிப்பிலும், விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தின் கண்காணிப்பிலும் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.