திருப்பத்தூர்: வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் எட்டு பேர் கொண்ட கும்பலால் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 21 குற்றவாளிகளைக் காவல் துறையினர் கைதுசெய்து வேலூர் மத்திய சிறை, சேலம் மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
இதில் முக்கியக் குற்றவாளியான டீல் இம்தியாஸ், அவரது கூட்டாளியான ஃபைசல் அஹமத், காலு என்கின்ற தாஸ்தகீர், நயீம், டெல்லி குமார், செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (20), செல்வா என்கின்ற செல்வகுமார் (25), மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்திய என்கின்ற சத்திய சீலன் ஆகிய எட்டு பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்த தோட்டா மணி என்கின்ற மணிகண்டன் (25), ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (23), பிரவீன் குமார் (23) ஆகிய மூன்று பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மொத்தம் 11பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள 21 பேர் மீது நகர காவல் துறையினர் இன்று குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Corona Vaccine: தமிழ்நாட்டில் 7 கோடி பேருக்கு தடுப்பூசி