திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியானது தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மேலும் அங்கு தகரமானமூலை என்னும் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு - ஆந்திர எல்லை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக, அப்பகுதியிலுள்ள காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாராயணபுரம் பகுதியிலிருந்து தகரமானமூலை பகுதிக்கு செல்லும் மண் சாலையானது முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து இல்லாமல் அன்றாட தேவைகளுக்கு கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் எப்போது மழை பெய்தாலும் இதுபொன்று சாலை முற்றிலும் சேதமடைவதாகவும், அதனால் மருத்துவ வசதிக்கு கூட சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்,
இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மண் சாலையை, தார் சாலையாக சீரமைக்க வேண்டும் என இரு மாநில அரசுக்கும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது