திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தராம்பாள். இவர் அதே பகுதியில் தன்னுடைய மகன் சரவணன், மருமகள், பேத்தி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுந்தராம்பாளின் பேத்தி கோமளா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, வேறு சமூகத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் பரத் குமார் என்பவரைக் காதலித்து, திருமணம் செய்து கொண்டதால், ஊரில் கட்டப்பஞ்சாயத்து செய்து, அவரின் குடும்பத்தினருக்கு 5500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கிவைத்தும் சொந்தக்காரர்களின் துக்க நிகழ்வுகளில் கூட கலந்து கொள்ளவிடாமலும் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சுந்தராம்பாளின் உறவினரான சாலம்மாள் என்பவர் இறந்த செய்தி அறிந்து, அந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சுந்தராம்பாளை ஊர் நாட்டாமை சதீஷ்குமார், உதவி நாட்டாமை ராஜேந்திரன் ஆகியோர் அவரை இழுத்து தள்ளிவிட்டு, "நீ உயிரோடு இருப்பது எங்களுக்கு அவமானம்" போன்ற தகாத வார்த்தைகளால் பேசியதால் சுந்தராம்பாளும், அவரது குடும்பத்தினரும் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்ந்திருக்கிறார்கள்.
இதனையடுத்து தங்களுக்குத் தொடர்ந்து அவமானத்தை ஏற்படுத்தி வரும் நாட்டாமை, உதவி நாட்டாமை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் சுந்தராம்பாள் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், அதே பகுதியில் ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்து கொண்ட சதீஷ்குமார், காந்தி, தேவராஜ், சிவா உள்ளிட்ட நான்கு பேரின் குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உள்ளதாக அப்பகுதி மக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆம்பூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட குடும்பத்தினரை, மூன்று ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்து சித்திரவதை செய்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்