திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடசேன். கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தார். அதே நேரத்தில் கனவாய் புதூர் பகுதியை சேர்ந்த சிவிலிங்கம் மற்றும் அவரது நண்பர் மோகன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த இரண்டு வாகனங்களும் நேதாஜி நகர் பகுதியில் உள்ள ஆலங்காயம் சாலையில் வந்தபோது எதிர்பாராவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வெங்கடேசன் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். சிவிலிங்கம், மோகன் முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிவிலிங்கம் வேலூர் செல்லும் வழியில் உயிரிழந்தார். மோகன் இன்று (ஜனவரி 26) காலை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.