திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சந்தைமேடு பகுதியில் இயங்கிவந்த தினசரி சந்தை, வாரச்சந்தை கரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 210 நாள்களுக்கு முன்பு புதிய கூடுதல் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கடந்த 15 நாள்களாக வாரச்சந்தை, தினசரி சந்தை அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் சந்தை அமைக்கும் இடத்தில் சிமெண்ட் கற்கள் பதித்து, கழிவறை, வாகன நிறுத்தம் ஆகிய நவீன வசதிகள் செய்யப்பட்டு இன்று முதல் 99 கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் காய்கறி விற்பனையை நகராட்சி ஆணையாளர் செண்ணு கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். மேலும், சந்தை நுழைவாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டு அங்கு நகராட்சி ஊழியர்களை பணியில் அமர்த்தி முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை அனுமதிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு வெப்பதன்மை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்து கபசுரக் குடிநீர் வழங்கி வருகின்றனர். விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளும் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சொந்தக் கடைகள் இருந்தும் அகதிகள் போல் ஆனோம்': கோயம்பேடு வியாபாரிகள் வேதனை