திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைப் பகுதியில் அமைந்துள்ளது தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க். இதற்கு அருகாமையில் உள்ள பெரிய அளவிலான காலியிடத்தில் அக்கம்பக்கத்தினர் குப்பைகள் கொட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதற்கிடையில் குப்பைகள் தேங்கி இருந்ததால், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இன்று (ஏப்ரல்.03) மதியம் குப்பைகளுக்கு தீ வைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து குப்பைகளிலிருந்து தீ மளமளவெனப் பரவி அருகே உள்ள பெட்ரோல் பங்க் பக்கவாட்டு சுவர், பைப் லைன்கள் வரை, பரவி எரிய ஆரம்பித்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனே ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஆனால், தீயணைப்பு வாகனம் பழுதாகி உள்ளதால், வருவதற்குக் கால தாமதம் ஏற்படும் எனக் கூறி தீயணைப்புத் துறையினர் அழைப்பைத் துண்டித்தனர்.
இதனையடுத்து பெட்ரோல் பங்கிலிருந்த ஊழியர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்தியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ பெரிய அளவில் பற்றி எரிந்ததால், தீயை அணைக்க முடியாமல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் திணறினர்.
பின்னர் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
சமூக விரோதிகள் சிலர் ஆபத்தை உணராமல் பெட்ரோல் பங்க் அருகாமையிலிருந்த குப்பைகளுக்குத் தீ வைத்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆம்பூரில் போதைப்பொருள்கள் பறிமுதல்