திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் முல்லையைச் சேர்ந்த முருகேஷ் மகன் பிரவீன் குமார் (27) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அருள்குமார் (24). நண்பர்களாகிய இருவரும், திருப்பத்தூரில் உள்ள தியான வகுப்புக்கு தினமும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று வருவது வழக்கம்.
அதேபோல், இன்று (ஜன.4) காலை இருவரும் தியான வகுப்பிற்கு இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்திற்கு முன்பு சென்றதால் அதை முந்திச் செல்ல எண்ணிய இளைஞர்கள், அதிவேகமாக சென்று உள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக, அதே சாலையில் திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் வந்த அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இவ்விபத்து குறித்து அறிந்த குரிசிலப்பட்டு காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து, இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தியான வகுப்புக்குச் சென்ற இளைஞர்கள் அரசு பேருந்தில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து; கம்பத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்