திருப்பத்தூர்: மட்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (27), கட்டட தொழிலாளி. சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்த போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவடு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் அஞ்சாமணி இவர்களின் இளைய மகள் ஆதிலட்சுமி (22) என்பவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்துள்ளனர்.
இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி பகுதியில் வசித்து வந்தனர். பின்னர் ஆதிலட்சுமியின் பெற்றோர்கள் சமாதானம் அடைந்து மகள் ஆதிலட்சுமிக்கு 20 சவரன் நகை மற்றும் இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை என்று காரணம் காட்டி அடிக்கடி அவரது கணவர் மற்றும் மாமியார், மாமனார் உடன் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு ஆதிலட்சுமி சமையல் செய்வதில் தாமதபடுத்தியதாக கூறி சூர்யா குடும்பத்தினர் ஆதிலட்சுமியுடன் சண்டையிட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சூர்யா ஆதிலட்சுமியை திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த ஆதிலட்சுமி நேற்று இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து பெண்ணின் உறவினருக்கு பக்கத்து வீட்டுகாரர்கள் தகவல் அளித்துள்ள சூர்யா இது குறித்து திருப்பத்துார் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் ஆதிலட்சுமி உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஆதிலட்சுமியின் உறவினர்கள் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்தை விரைந்து வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்ற போது அவர்கள் ஆதிலட்சுமி இறப்பில் தங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய விசாரணை மேற்கொள்வதாக கூறிய பின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதிலட்சுமியின் உறவினர்கள், "எங்கள் பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். நாங்கள் அவருக்கு செய்ய வேண்டியவைகள் செய்து விட்டோம். இந்நிலையில் நேற்று போனில் பேசிய அவர் சோகமாக பேசினார். எங்கள் வீட்டில் பிரச்னையாக உள்ளது. அதை நீங்கள் கண்டுகொள்வதில்லை என்று வருத்தப்பட்டார். வீட்டிற்கு வா பேசி கொள்ளலாம் என்று கூறி இருந்தோம். காலையில் போன் செய்கிறேன் என்று கூறிவிட்டு வைத்து விட்டார்.
திடீரென்று இரவு 2 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் போன் செய்து கூறினார்கள். நாங்கள் காலையில் இருந்து இங்கு காத்திருக்கிறோம். இதுவரை சம்பந்தவட்டவர்கள் வந்து என்ன ஆச்சு என்று சொல்லவில்லை. உறவினர்கள் யாரும் இதுமாதிரி பிரச்னை, இதுமாதிரி சம்பவம் என்று யாரும் சொல்லவில்லை. இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் கேட்ட போது அவர்கள் தாய் தந்தை வரட்டும், புகார் வாங்கி விட்டு நாங்கள் பேசுறோம், நாங்கள் ஆர்டிஓ விடம் பேச வேண்டும் என்கின்றனர். எங்களுக்கு நியாயம் வேண்டும். பெண்ணின் தாய், தந்தை கேரளாவில் இருந்து இப்பொழுது தான் வந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
திருமணமாகி இருண்டு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கு விசாரணை திருப்பத்துார் சப் கலெக்டருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் தோட்டத்தில் உலா வரும் ஒற்றைப் புலி - வீடியோ வைரல்!