பெங்களூரைச் சேர்ந்த பாதிரியார்கள் விக்டர் மோகன், தாவீது, ஓட்டுநர் சாம்சன் ஆகியோர் சென்னை சென்றுவிட்டு இன்று (ஜுன் 13) அதிகாலை பெங்களூரு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வெங்கிளி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலுள்ள தடுப்புச் சுவர் மீது மோதி சாலையோரமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாதிரியார்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் சாம்சன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.